மதுரையை வெல்வாரா எழுத்தாளர்?

ராகுல்காந்தி வருகை -ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு மிரட்டல்!

சிபிஎம் கட்சி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக எழுத்தாளர் சு.வெங்கடேசன் களமிரக்கப்பட்டுள்ளார். கட்சிக்குள்ளும் பொது வெளியிலும் இந்நிகழ்வு ஆச்சரியத்துடன் பார்க்கப்படும் நிலையில், அவர் எப்படி வெல்வார் என்ற கேள்வி மார்க்சிஸ்ட் கட்சிக்குள்ளேயே கேட்கத்துவங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரி கட்சிகள், முஸ்லீம் லீக், ஐஜேகே, கொமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் இந்தியக்கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவையில் முன்னாள் எம்.பி பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். மதுரையில் அக்கட்சியின் சார்பில் எழுத்தாளரும், சாகித்ய அகாதமி விருது பெற்றவருமான சு. வெங்கடேசன் களமிறங்குகிறார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை அறிவித்தது. அதன்படி திருப்பூரில் சுப்பராயனும், நாகப்பட்டினத்தில் செல்வராஜும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் வேட்பாளர்களில் பி.ஆர். நடராஜன் ஏற்கனவே 2009-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்திய மாணவர் சங்கத்திலும், ஜனநாயக வாலிபர் சங்கத்திலும் பெரும் போராட்டங்களை நடத்திய பி.ஆர். நடராஜன் ஓரளவு கோவை தொகுதி மக்களுக்கு அறிமுகம் ஆனவர்.
தமிழகத்தின் முன்னணி எழுத்தாளரான சு.வெங்கடேசனை இலக்கிய உலகம் அறியும், மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் வெங்கடேசனுக்கு 49 வயதாகிறது.மதுரை, திருப்பரங்குன்றத்தைச் சார்ந்தவர். மனைவி பி.ஆர். கமலா. இவர்களுக்கு யாழினி, தமிழினி என இரண்டு மகள்கள் உள்ளனர். சாகித்ய அகாதமி விருது வென்ற எழுத்தாளரை மார்க்சிஸ்டுகள் மதுரை தொகுதியில் நிறுத்தியிருப்பது கட்சிக்குள்ளும் கூட்டணிக் கட்சிக்குள்ளும் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்றைய தேதியில் செலவு செய்யாமல் எந்த வேட்பாளரும் வெற்றி பெற முடியாது. பொதுவாக மார்க்சிஸ்டுகள் பணம் கொடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பணம் கொடுக்காமல் எப்படி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வெங்கடேசன் வெல்லப் போகிறார்? என்ற கேள்வி கட்டிக்குள்ளெயே பலரும் கேட்டிருக்கிறார்கள். மேலும் அவர் நாயக்கர் சாதியை சேர்ந்தவர் என்றும் மதுரை தொகுதி தேவர் சாதியினர் நிறைந்த தொகுதி எப்படி வெங்கடேசன் வெற்றி பெற முடியும் என்றும் கேட்கிறார்கள். பார்க்கலாம் ஏதேனும் அதிசயங்கள் நடந்து வெங்கடேசன் வென்றால் ஒரு எழுத்தாளர் எம்.பி ஆன கதை என்று ஒரு தொடர் எழுத அது உதவும்.

#எழுத்தாளர்_வெங்கடேசன் #சு_வெங்கடேசன் #காவல்கோட்டம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*