எட்டுவழிச்சாலை வழக்குப் போட்ட விவசாயி அன்புமணி மீது பாய்ச்சல்!

எட்டுவழிச்சாலை நிறைவேற்றுவதில் எடப்பாடி பழனிசாமி உறுதி?

சென்னை முதல் சேலம் வரையிலான எட்டுவழிச்சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நில ஆர்ஜிதம் செல்லாது என நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. பாமக, அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில்  பாட்டாளி மக்கள் கட்சி  தாங்கள்தான் வழக்கு தொடர்ந்து எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு எதிராக தடை கோரினோம் என்று பேசி வருகிறார்கள்.

இந்நிலையில், எட்டுவழிச்சாலைக்கு எதிராக முதன்முதலாக வழக்குத் தொடர்ந்த தருமபுரி மாவட்ட விவசாயியான கிருஷ்ணமூர்த்தி அன்புமணி ராமதாஸுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“ எட்டு வழிச்சாலைக்கு எதிராக முதலில் வழக்கு போட்டு எட்டு வழிச்சாலையை தடுத்து நிறுத்தியது பாதிக்கப்பட்ட விவசாயி கிருஷ்ணமூர்த்தியாகிய நான் தான் !

பாடுபட்டு விளைய வைத்தது நான்! அறுவடை செய்வது நீங்களா?

எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கை பாமகவின் திரு. அன்புமணி முதலில் போட்டதாக பொய்யுரைப்பதா?

நேர்மையிருந்தால் என்னோடு திரு. அன்புமணி விவாதத்திற்கு தயாரா?

எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கை முதலில் போட்டு அவ்வழக்கின்மூலம் (வழக்கு எண். W.P. No. 16630/2018) எட்டு வழிச்சாலைக்கு எதிரான தடையாணையையும் பெற்றது எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.வி. கிருஷ்ணமூர்த்தியாகிய நான். எனவேதான் எட்டு வழிச்சாலைக்கு எதிரான தடை உத்தரவு தீர்ப்பின் முதல் பக்கத்திலேயே என் பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியும், சில ஊடகங்களும் ஏதோ திரு. அன்புமணி மட்டுமே எட்டு வழிச்சாலைக்கு எதிராக வழக்குப் போட்டு இத்தீர்ப்பை பெற்றுத் தந்ததாக நாகூசாமல் பொய்யுரைக்கிறார்கள். பல இடங்களில் பாமகவின் வழக்கே முதல் வழக்கு என்றும் நாக்கூசாமல் பொய்யுரைக்கிறார்கள். அன்பு நண்பர் பியூஸ் மனுஷ் கூறியிருப்பது போல் 115 பக்க தீர்ப்பில் திரு. அன்புமணி பெயரோ, அவரின் வழக்கறிஞர் பெயரோ ஒரு இடத்தில்கூட குறிப்பிடப் படவில்லை. ஆனால் யாரோ பெத்த பிள்ளைக்கு யாரோ இனிசியல் போடுவது போல், நான் போராடி பெற்ற தீர்ப்புக்கு, பாமகவும், திரு. அன்புமணியும் உரிமை கொண்டாடப் பார்க்கிறார்கள். சில ஊடகங்களும் இத்தவறைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

பாமகவும், அன்புமணியும் போட்ட வழக்கினால்தான் இத்தீர்ப்பு வந்ததது என்று இனிமேலும் பொய் சொல்ல வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். அப்படி யாரேனும் நினைத்தால், துணிச்சல் இருந்தால் திரு. அன்புமணி அவர்கள் என்னோடு நேரடி விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன். அங்கு நான்தான் எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கை முதலில் போட்டேன் என்பதை நிரூபித்துக் காட்ட தயாராக இருக்கிறேன்.

பி.வி. கிருஷ்ணமூர்த்தி, பாதிக்கப்பட்ட விவசாயி
எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
அ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிபட்டி தாலுகா
தருமபுரி மாவட்டம்
செல்: 8608696252

#Anpumani_Ramdass #அன்புமணிராமதாஸ் #தருமபுரிதொகுதி #ராமதாஸ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*