நிர்வாணம் பழகிக் கொள்வோம் வாருங்கள்! –அனிதா என். ரத்னம்!

எட்டுவழிச்சாலை நிறைவேற்றுவதில் எடப்பாடி பழனிசாமி உறுதி?

மயங்கி விழுந்த மன்சூர் அலிகான் –மருத்துவமனையில் அனுமதி!

டெல்லியில் விவசாயிகள் கொதிக்கும் தார் சாலையில் அம்மணமாக உருண்டது கண்டு கண்ணீர் விட்டீர்களா நீங்கள்? அட்லீஸ்ட் உச்சு கொட்டி லேசா வருத்தமாவது பட்டீங்களா?? ஆமாம்னா, அப்ப அதுக்கு நீங்க சரிப்பட்டு வருவீங்க. வாங்க பழகிக்கலாம் நிர்வாணத்துக்கு.. இங்க அம்மணமாகி அவமானப்படுறது அவங்க மட்டுமில்ல அவங்களுக்குத் துணையா நாமும் இருக்கோம்னு சொல்லி ஆற்றுப்படுத்தி நம்மையும் ஆறுதல் படுத்திக்கலாம் வாங்க. உண்மையில் இது ஆறுதலான விஷயமில்ல ஆத்திரம் தரக்கூடியது. ஆனா நாமெல்லாம் ஆத்திரப்படுவதற்கான உரிமையும், தகுதியும் இல்லாதவர்களா இருக்கோம். அப்படியே பட்டாலும் அதற்கான ஒரு பலனும் கிடைக்கப் போறதில்ல.. அது தான் நிதர்சனம்.

ஐந்தாண்டு காலம் ஒரு வளர்ச்சியும் தராத அதே அதிமுகவை மீண்டும் இங்கே தமிழகத்தில் ஆட்சியில் அமர்த்தினப்பவே நாம அந்தத் தகுதியை இழந்துட்டோம். நமக்காக டெல்லியில் பேசக்கூடிய, போராடக்கூடிய திறமையான எம்பிக்களை தேர்ந்தெடுத்து அனுப்பாமல் ஒரு திறமையும் இல்லாத, மக்கள் நலனில் துளியும் அக்கறை இல்லாத, மாநில வளர்ச்சியைப் பற்றி எந்த நாளும் சிந்திக்கக் கூடிய நேர்மை சிறிதுமில்லாத, சுயமாக சிந்திக்கக் கூடிய திறனே இல்லாத அதே அதிமுகவின் 37 கூழைக் கும்பிடு அடிமைகளை சென்ற லோக்சபா தேர்தலில் தேர்ந்தெடுத்து அனுப்பிய போதே அந்த உரிமைகளையும் நாம் இழந்துவிட்டோம்.

பின்ன, நாமென்ன கேரள மக்கள் போல “எங்களை இங்கே ஆள கம்யூனிஸ்ட்களும், மத்தியில் எங்கள் மாநில உரிமைகளை எடுத்துக் கூறி திட்டங்களை செயல்படுத்த காங்கிரஸ் பிரதிநிதித்துவமும் வேணும், அதனால் தான் மத்திய எம்பி தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியவும் மாநில ஆட்சிக்கு கம்யூனிஸ்ட்டையும் தேர்ந்தெடுத்தோம்னு” சொல்லக் கூடிய தெளிவு உள்ளவங்களா என்ன? இருந்தா ஏன் ஒரு பக்கம் இலங்கை ரானுவத்துக்கு மீனவர்களை பலிகொடுத்துக் கொண்டும், மறுபக்கம் இப்படி விவசாயிகளை அம்மணமாகப் போராடும் நிலைக்குத் தள்ளப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் இருக்கப் போகிறோம்? இது பற்றியெல்லாம் சிறிதும் கவலையின்றி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மாநில அரசையும், அதன் பிரதிநிதிகளான அமைச்சர்கள் இடைத்தேர்தலில் தங்களின் புதிய கட்சி முதலாளியை ஜெயிக்க வைக்க அல்லும் பகலும் பல கோடிகளை வாரி இறைத்துப் பாடுபடும் காட்சிகளைக் கண்டு கையறுநிலையில் ஏன் புலம்பிக் கொண்டிருக்கப் போகிறோம்

நமக்கு இருக்கவே இருக்கு நம்ம சாதிப் பெருமை. நம்ம சாதித் தலைவர்கள் எல்லாத்தையும் சாதிச்சுக் குடுத்துருவாங்க. இவ்வளவு நாளா தென்னிந்தியர்களை மதராசின்னு சொல்லிட்டு இருந்தவங்க இன்னைக்கு கறுப்பன்கன்னு சொல்ற லெவலுக்கு ஒசந்துட்டாங்க. இத்தன நாளா வெளிநாட்டுக்காரனுக்குத் தான் நாமெல்லாம் கறுப்பன்களா தெரிஞ்சோம்னா இந்த கோதுமை ரொட்டிகளுக்கும் அப்டித்தான் தெரிஞ்சிருக்கோம் பாருங்க.. நோட் த பாய்ண்ட் ஆண்ட பேண்டவர்களே..

சரி அதையெல்லாம் விடுங்க, அந்த அம்மண மேட்டருக்கு வருவோம். மத்திய அரசாங்கம் விவசாயிகளை மட்டுமில்ல நம்ம எல்லாரையுமே கொஞ்சம் கொஞ்சமா உருவி அம்மணமா ஆக்கிட்டுத் தான் இருக்காங்க. நாமும் அப்படி முழுசா ரோட்டுல ஓடுற நாள் வெகு தூரத்துல இல்லை. அதனால விவசாயிகளைப் பாத்து விசனப்படற நாம நம்மையும் நமக்கு கீழ உருவப்படும் நம் உரிமைகளையும் கூட இந்த நேரத்துல நினைச்சுப் பாத்து பழகிக்க வேண்டியது அவசியம்.

ஆதார் தான் இனி நாம் இந்த நாட்டுப் பிரஜை என்பதற்கான ஒரே ஆதாரம். இப்பவே டூ வீலர் வாங்குவது முதல் சொத்து பத்திரம் பதிவது வரை ஆதாரை கட்டாயமாக்கி விட்டார்கள். ஒரு பக்கம் உச்சநீதிமன்றம் தொடர்ந்து அது அவசியமல்ல, ஆதார் கட்டாயமாக்கப்படக் கூடாது என்று தொடர்ந்து கூவிக் கொண்டிருப்பதைக் கேட்பதற்கு ஆட்சியிலிருப்பவர்களுக்கு காதுகளில்லை. விவசாயம் அழிவதையும் விவசாயி சாவதையும் காண்பதற்கு கண்கள் இல்லாதது போலவே.. இப்போதைக்கு கேஸ் மானியத்தை நிறுத்தியது முதல் பள்ளிகளில் மதிய உணவு சாப்பிட்ட நாலரை லட்சம் போலி மாணவர்களை பிடித்தது, இனி மதிய உணவு சாப்பிடவும் ஆதாரைக் கட்டாயமாக்கி மாணவர்கள் சோற்றில் வைத்த கையை அப்படியே இறுகப் பற்றி நிறுத்த, அவர்களின் அடிப்படை உணவு உரிமையை உருவிக் கொண்டது. இது போல எதிர்காலத்தில் ஆதாரைக் கொண்டு இன்னும் பலவற்றை சாதித்து நம்மை நிர்வாணமாக்கவிருக்கிறது நம் மத்திய பாஜக அரசு.

பணமதிப்பு நீக்கத்தின் மூலம் கறுப்புப் பணத்தை ஒழித்து, அலமாரி, அஞ்சரைப் பெட்டி முதல் புடவை முந்தானை வரை பதுக்கி வைத்திருந்த அனைத்தையும் உதறி வெளிக்கொணர்ந்திருக்கிறது. முதலில் நாட்டின் அரசாங்கப் பணியில் உள்ள அனைவரும் கணக்கு வைத்துள்ள எஸ்பிஐ வங்கிகளின் மூலம் குறைந்தபட்ச இருப்புத் தொகை ஐயாயிரம், எஸ்எம்எஸ் சார்ஜ், சர்வீஸ் சார்ஜ், ஏடிஎம் சார்ஜ் என்று நம் பணத்தை அறிவித்து விட்டு உருவத் தொடங்கினார்கள். மற்ற வங்கிகள் அறிவிப்பு ஏதும் செய்யாமலே Rs. 150 debited from your account, Rs. 20 debited from your account என்று விளக்கங்கள் ஏதுமில்லாமலே வாரத்துக்கு இரண்டு முறை அக்கவுண்ட்டிலிருந்து பணத்தை உருவிக் கொண்டிருக்கிறார்கள். (அதோடு மார்ச் 30 ஆம் தேதி வாங்கிய கடனுக்காக towards loan recovery என்ற prefixசுடன் March 31 fiscal ending க்காக அக்கவுண்ட்டில் 1700/ ரூபாயை மட்டும் விட்டுவிட்டு கட்ட வேண்டிய தொகைக்கு மேல் ஐந்தாயிரத்தை உருவியது தனி நிர்வாணக்கதை.)

இப்படி நம் மக்கள் அனைவரின் நிதி கையாளும் விஷயங்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்த பாஜக மத்திய அரசு தான் தேர்தல் நிதி சீர்திருத்தம் என்ற பெயரில் “தேர்தல் நிதிப் பத்திரங்களை” அறிமுகம் செய்துள்ளது. இந்தப் பத்திரங்களை வங்கிகளிலிருந்து மின் – பணப்பரிமாற்றம் அல்லது காசோலை மூலமாக வாங்கி, தாங்கள் விரும்பும் கட்சிகளுக்குக் ஒருவர் கொடுக்கலாம். நன்கொடை அளித்தவர் யார் என்ற விவரம் இந்தப் பத்திரத்தில் இருக்காது. அரசியல் கட்சிகள் தங்கள் வங்கிக் கணக்கில் இந்தப் பத்திரத்தைப் பணமாக மாற்றிக்கொள்ளலாம். “மக்கள் அரசியல் கட்சிகளுக்குக் காசோலைகள் மூலமாக நன்கொடைகளை வழங்க விரும்புகிறார்கள். ஆனால், தங்களது அடையாளத்தை வெளிப்படுத்த அச்சப்படுகிறார்கள். தேர்தல் நிதிப் பத்திரங்களைப் பயன்படுத்தினால் நேர்மையான நன்கொடை முறை, நன்கொடையாளர்கள் பற்றிய ரகசியங்களைப் பாதுகாப்பது என இரண்டையும் சாதிக்க முடியும்” என்கிறார்அருண் ஜேட்லி இது பற்றி. நம்ம எல்லாரையும் கேஷ்லெஸ்ன்னு, ஆதார்கார்டுன்னு டிஜிட்டல் அம்மணமாக்கின இவங்க கட்சிக்கு நிதி கொடுக்கற மக்கள பாரம்பரிய சோலாப்பூர் பெட்ஷீட்டப் போர்த்தி பாதுகாப்பாங்களாமே..!

யாருடா அது அந்த கட்சிகளுக்கு நிதியளிக்க அவ்ளோ ஆசப்படற மக்கள்னு தானே கேக்க வரீங்க..? அது ஆருன்னு சொல்லித்தான் தெரியணுமா என்ன?

ஆறு மாச இலவச ஜியோ திட்டத்தை அறிவிச்சு ஐடியா, டொக்கோமோன்னு கம்பெனிகளை காலி செஞ்சு மிச்சமிருக்கற ஏர்டெல், வோடாஃபோனை அலறடிக்கும் அண்ணன் அம்பானி அவரோட ஜியோ சிம்கார்ட வாங்க நம்ம ஆதார் கார்ட குடுத்தாத் தான் ஆச்சுங்கறார். தொடங்கின மூணு மாசத்துல பத்து கோடி வாடிக்கையாளர்களை வளைச்சிருக்கார், அவங்களோட கைரேகை, கண்விழிப்பதிவு போன்ற பயோமெட்ரிக் விவரங்களையும் சேர்த்து வளைச்சிருக்கார். இந்த இடத்துல போன வாரம் 2019 தேர்தலில் செல்போன்கள் முக்கிய பங்கு வகிக்கும்னு நம்ம பிரதமர் மோடி ஆற்றின உரையைப் பொறுத்திப் பாக்கச் சொல்லித் தூண்டுது இந்தப் பாழாப் போன மூளை. ச்சை.. !

தற்போது அஃபிஷியலாக 16 மாநிலங்களில் ஆளும் பாஜக அன்அஃபிஷியலாக மற்ற மாநிலங்களை தங்கள் கவர்னர் மூலம் ஆட்சி செய்ய முனைகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தொடர்ந்து இடையூறு செய்யும் தில்லி, புதுச்சேரி கவர்னர்களின் செயல்பாடுகள். ஒரு புறம் கார்ப்பரேட்டுகளுக்கு வசதியாக கதவைத் திறந்து விட்டுவிட்டு மற்றொரு புறம் பாபா ராம்தேவ், ஜக்கி வாசுதேவ் மாதிரியான சாமியார்களை தொழிலதிபர்களாக்கி தங்களின் நிதி ஆதாரங்களை வலுப்படுத்துகிறது. பல தசமங்களாக FMCGயில் முன்னணியில் இருந்த இந்துஸ்தான் லீவர், கோத்ரெஜ் போன்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி இன்று பதஞ்சலி நம்பர் ஒண்ணாக இருக்கிறது. தற்போதுள்ள சில நூறு ஏக்கர் ஆஸ்ரமம் போதவில்லை இன்னும் பெரிதாக வேண்டும் என்று அனைத்திற்கும் ஆசைப்படச் சொல்லும் வாசுதேவ் மும்பை தாஜில் நடக்கும் உலக தொழில் நிறுவனங்களின் கூட்டத்தில் பல நாட்டு தொழிலதிபர்களுக்கு அறிவுரை சொல்லி ஒரு மணி நேர உரையாற்றுகிறார். ஆர்எஸ்எஸ் பாழடைந்த, பராமரிப்பில்லாத கோவில்களை கையில் எடுப்பது, கலாச்சார விதிகளை அமலுக்குக்கு கொண்டு வருவதன் மூலமாகவும் வலுப்பட்டு வருகிறது. அறிவிக்கப்படாத துணைப் பிரதமர் அமித்ஷா தன் ஆபரேஷன் தாமரையை கர்நாடகத்துக்கு அடுத்து புதுச்சேரிக்கு விரிவுபடுத்தியுள்ளதாகத் தகவல். அங்க முன்னாள் முதல்வர் எஸ். எம்.கிருஷ்ணா போன்ற காங்கிரஸ் பெருந்தலைகளை வளைத்தது போல இங்கும் பல கோடி நிதி ஒதுக்கி வலை விரித்து காத்திருப்பதாக ஆளும் காங்கிரஸ் காட்சியில் பரவலாகப் பேசப்படுகிறது.

ஆக…, இந்தியா பாரதம் ஆகி வந்தது. தற்போது ஆளும் மத்திய அரசே நம் தேசமாக மாறி வருகிறது. ஆட்சிக்கு எதிராகப் பேசும் அனைவரும் தேசத் துரோகிகளாகி வருகிறோம். நீட் தேர்வெழுதி தேறி இனி நம் கிராமப்புற அடித்தட்டு மாணவர்கள் மேலே வந்து டாக்டராவது எட்டாக் கனியாகும். அதை பொறியியல் படிப்புக்கும் விரிவுபடுத்தப் போகிறார்களாம். இனி நம் மாணவர்களுக்கு மதிய சோறு கிடையாது, உயர்படிப்பு கிடையாது. நமக்கு பேங்க்ல பணம் இருக்காது. காவேரி மேலாண்மை வாரியம்லாம் முடியாது. ஒற்றைத் தீர்ப்பாயம் தான். அதனால இனி தண்ணி கிடைக்காது, விவசாயம் கிடையாது. மீனவர்கள் இலங்கை கடற்படையிடம் தொடர்ந்து படகுகளை ஒழித்தும், அவர்கள் துப்பாக்கிக்கும் இரையாகி மடிய வேண்டியது தான்.

போராட்டம் செய்பவர்கள் செய்து கொண்டே இருக்க வேண்டியது தான். இயலாதவர்கள் அவர்கள் எடுக்கப் போகும் மீத்தேனையோ ஹைட்ரோ கார்பனையோ நுகர்ந்து சாகலாம் அது நமக்குள்ள மற்றொரு ஆப்ஷன். நம் பல உரிமைகளும் உருவப்பட்டு விட்டது. இனியும் தொடர்ந்து நம் உரிமைகளும், உடமைகளும் உருவப்படுவோம். அம்மணமாக்கப்படுவோம்.

அதனால வாங்க இப்பருந்தே நிர்வாணத்தை பழகிக்கிருவோம்..

#அய்யாக்கண்ணு #நிர்வாணபோராட்டம் #விவசாயிகள்_போராட்டம்

பொள்ளாச்சி பிரகதி -பாலியல் சித்ரவதை செய்து கொன்ற அத்தை மகன்!

வாக்குச் சாவடிகளைக் கைப்பற்ற பாமக திட்டம்?

 

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*