இந்துத்துவாவை எதிர் கொள்ளாமல் திமுக எதிர் காலத்தில் வெற்றி பெற முடியாது – அரிபரந்தாமன்

இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகளை மிகப் பெரும்பாலும் தீர்மானிப்பது சாதியும் மதமும் தான். சில நேரங்களில் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளை தனது கட்சியின் அதீத தேசப்பற்றின் (hyper-nationalism and jingoism) சாதனையாக கூறுவதும் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும்.

மேற்சொன்ன காரணங்களால்தான், இப்பொழுது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பது என் கருத்து.

இதே கருத்தை, சுப்ரமணிய சுவாமியும் இந்துத்துவ அரசியலால்தான் மோடியின் வெற்றி சாத்தியமானது என்று கூறியுள்ளார் (காண்க: https://twitter.com/Swamy39/status/1131423699435831296).

இன்றும் இந்தியாவில், அனைத்திலும் சாதி பெரும் பங்கு வகிக்கிறது.

மேல்சாதிக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கி, குறிப்பாக வட இந்தியாவில் 15%-க்கும் கூடுதலாக இருக்கும் உயர்சாதிகளை இந்த தேர்தலில் கிட்டத்தட்ட முழுவதும் அதன் பக்கம் நிறுத்திக்கொண்டது பாஜக. தமிழ்நாடு தவிர வேறு எங்கும் இந்த 10% இட ஒதுக்கீடு எதிர்க்கப்படவில்லை. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட அநேகமாக அனைத்து கட்சிகளும் 10% இட ஒதுக்கீட்டை ஆதரித்து, பாஜக-வின் இந்துத்துவ-சாதி அரசியலுக்கு பலம் சேர்த்தது. காங்கிரசும் கம்யூனிஸ்ட்களும் இதை ஆதரித்தாலும் உயர்சாதியினரின் நம்பிக்கையை பெற்றுது பாஜக மட்டுமே.

இட ஒதுக்கீடு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதும் மேல் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு அளித்து, தனது வாக்கு வங்கியை உறுதிப்படுத்திக் கொண்டது பாஜக. ஏற்கெனவே அனைத்து தளங்களிலும் தங்கள் எண்ணிக்கை சதவிகிதத்திற்கும் மிக மிக அதிகமாக இருக்கையில், உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு எதற்கு? அனைவருக்கும் அதிகாரம் என்பதே சமூக நீதி. உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு என்பது மனுநீதி.

இந்துத்துவாவின் சாதிய அரசியலை எதிகொள்ளும் ஆற்றல், சாதி ஒழிப்பிற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் சமூக நீதிக்கான இயக்கங்களுக்கு மட்டுமே உண்டு. சமூக நீதி இயக்கம் வேர் கொண்டுள்ள தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் மட்டும் தான் இந்துத்துவ அரசியல் பெரிய அளவில் எடுபடவில்லை.

அடுத்து, இந்து மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தி, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் இந்துத்துவ அரசியல் வளையத்துக்குள் வெற்றிகரமாக கொண்டுவந்துவிட்டது பாஜக. அதனால்தான், சமஜ்வாதி-பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டணியால் உத்தரபிரதேசத்தில் வெற்றி பெற முடியவில்லை. சுமார் 20% முஸ்லிம் மக்கள் உத்தரபிரதேசத்தில் இருந்தாலும், 80 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்றில் கூட 2014 தேர்தலிலும், இப்பொழுது நடைபெற்ற 2019 தேர்தலிலும் முஸ்லிம் வேட்பாளராக ஒருவரையும் பாஜக நிறுத்தவில்லை.

மாட்டுக்கறி அரசியலை வெளிப்படையாக நடத்துகிறது பாஜக. மாட்டின் பெயரால் முஸ்லிம்கள் வட இந்தியாவில் தொடர்ந்து தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். “லவ்ஜிகாத்” என்பதின் பெயரால் நடத்தப்பட்ட கொடுமைகளுக்கும் அளவில்லை. இந்துத்துவாவை எதிப்பவர்களை பாகிஸ்தானுக்கு போங்கள் என தொடர்ந்து பேசிவருகிறது. முஸ்லிம்களும், கிறித்தவர்களும பெரும் அச்சத்தில் வாழும் நிலையை உண்டாக்கிவிட்டது பாஜக.

மலேகான் குண்டுவீச்சு வழக்கில் ஒரு குற்றவாளியான பிராக்யா சிங் தாக்குர் மத்தியபிரதேசம் போபாலில் பாஜக-வின் வேட்பாளர். அவர் மிகவும் வெளிப்படையாகவே இந்துத்துவ அரசியலை பேசிவருகிறார்; மகாத்மா காந்தியை படுகொலைசெய்த நாதுராம் கோட்சேவை தேசபக்தன் என்று பேசிய பின்னரும் அவர் தேர்தலில் வெற்றி பெருகிறார்.

தேர்தல் முடிவதற்கு முன்னரே கேதர்நாத் சென்ற மோடி, இந்து கோயிலில் தவம் இருப்பது போன்ற காட்சிகள் அனைத்துவிதமான ஊடகங்களிலும் வெளியானது இந்துத்துவ அரசியலே.

இந்துத்துவ அரசியலுக்கு பணிந்து ராகுல்காந்தியை கோயில் கோயிலாக போகவைத்துவிட்டது பாஜக.

பெரியாரின் சீடர்கள் என்று கூறும் திமுக, மகாத்மா காந்தியை சுட்டு படுகொலை செய்த நாதுராம் கோட்சே தான் சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என்று கமல்ஹாசன் கூறிய போது அதற்கு ஆதரவாக வினையாற்றாமல் போனது இந்துத்துவாவின் வெற்றியே. இந்துத்துவாவை எதிர் கொள்ளாமல் திமுக எதிர் காலத்தில் வெற்றி பெற முடியாது.

மதத்தை அரசியலில் இருந்து முழுவதுமாக விலக்கிவிடவேண்டும். மதம் தனி மனிதனின் விருப்பம் சார்ந்தது. மதத்தை அரசியலில் கலக்கவிடுதல் சனநாயகத்திற்கு ஆபத்தானது; மதச்சார்பின்மைக்கு எதிரானது. மன்னர்கள் காலத்தில்தான் அரசும் மதமும் பின்னிப் பிணைந்து கிடந்தது. சனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால், மதத்தை அரசியலில் இருந்து பிரிப்பதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். நரேந்திர தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் என பலர் இந்த போராட்டத்தில் உயிர் தியாகம் செய்திருப்பினும், இந்த போராட்டம் போதிய வலுவானதாக இல்லை.

மூன்றாவதாக, இந்தியாவை பாதுகாப்பதற்கான தகுதி படைத்த ஒரே அரசியல் தலைவர் மோடி என்றும் (சவுக்கிதார்), பாகிஸ்தான் பாலக்கோட்டில் புல்வாமா தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்த இந்திய ராணுவத்தை “மோடியின் சேனை” என்று பாஜக ஆளும் உத்தரபிரதேச முதல்வர் கூறுவதும், இந்த ராணுவ நடவடிக்கைக்காக பாஜக-விற்கு வாக்களிக்க வேண்டும் என்று மோடி பேசியதும் சனநாயகத்திற்கு ஆபத்தை உண்டாக்கும். இது ஆட்சியை பிடிப்பதற்கான அதீத தேசியவாதம் (hyper-nationalism and jingoism). சர்வாதிகாரி ஹிட்லரும் இப்படித்தான் பேசினான். அவனால்தான் ஜெர்மனியை காப்பற்ற முடியும் என்று பேசி ஆட்சிக்கு வந்த ஹிட்லர் சர்வாதிகாரியானது வரலாறு.

இதுபோலத்தான் 1971-இல் பாகிஸ்தானுடன் இருந்த கிழக்கு வங்கம் பிரிந்து பங்களாதேஷ் உருவானபோது நடந்த ராணுவ நடவடிக்கையை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, அவசர காலத்தை பிரகடனப்படுத்தி சர்வாதிகாரி ஆனார்.

2014-இல் வளர்ச்சி (Development), நல்லாட்சி (Good Governance) என்ற முழக்கங்களுடன் ஆட்சியை பிடித்த மோடி, எந்த வளர்ச்சியை தந்தார் என்றும், எந்த முறைகளில் நல்லாட்சி வழங்கினார் என்றும் சாதனையை சொல்லி வாக்கு கேட்கவில்லை. அவரது ஆட்சியில் சாதனையேதும் இல்லை. பணமதிப்பு இழப்பு, விலைவாசி ஏற்றம், வேலையின்மை போன்ற வேதனைகள்தான் உண்டு.

எனவேதான், இந்துத்துவ அரசியலையும் ராணுவ நடவடிக்கைகளையும் தேர்தலில் முன்னிறுத்தி வெற்றியும் பெற்றுள்ளது பாஜக. இந்துத்துவ அரசியலுக்கு ஓரளவு எதிர்வினை ஆற்றியது தமிழ்நாடு மற்றும் கேரளம் மட்டுமே.

பெரியார் அம்பேத்கர் வழியில் சமூகநீதிக்கான போராட்ட அரசியலை முன்னெடுப்பது மட்டுமே இந்துத்துவ அரசியலை வீழ்த்தும்.

#நாடாளுமன்றதேர்தல் #பாஜக_வெற்றி #மதவாதம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*